எனது அன்பார்ந்த நபி

அவரது இளமைப் பருவமும் திருமணமும்

அவரது இளமைப் பருவம்

"முஹம்மத் அலைஹிஸ்ஸலாம் அவரது மிகுந்த நேர்மை மற்றும் விசுவாசத்தின் காரணமாக, முழு உலகமும் ஒரு சிறந்த மனிதர் என்று உறுதிப்படுத்தியது. அவரது மிகப்பெரிய எதிரிகளாலும், மூர்க்கமான காஃபிர்களாலும் கூட முஹம்மத்-அல் அமீன் (நம்பகமான முஹம்மத்) என்று அழைக்கப்பட்டார்."
ஹுஸைன் ஹில்மி இப்னு ஸஈத் (ரஹ்மதுல்லாஹி அலைஹ்)

அனைத்து அம்சங்களிலும் எல்லா மனிதர்களிலும் சிறந்தவரான முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம் இளமைப் பருவத்திலிருந்தே மக்கா மக்கள் மத்தியில் தமது சகாக்களை விட அதிகமாக நேசிக்கப்பட்டார். அவரது உயர்ந்த தார்மீக குணங்கள், மக்களிடம் முன் எப்போதும் இல்லாத அன்பான நடத்தை, அமைதி, மென்மையான தன்மை மற்றும் அவரது மற்ற உயர்ந்த தன்மைகள் காரணமாக, அவர் அனைத்து மக்களாலும் நேசிக்கப்பட்டு போற்றப்பட்டார். அவரது வியக்கத்தக்க நேர்மை மற்றும் நம்பகத்தன்மை காரணமாக, மக்கா மக்கள் அவரை 'அல்-அமீன்' என்று அழைத்தனர். இதன் பொருள் 'எப்போதும் நம்பகமானவர்' என்பதாகும். இளம் வயதிலிருந்தே இந்தப் பெயரால் அவர் அறியப்பட்டார். 

நமது நபிகளாரின் இளமைக் காலத்தில், அரேபியர்கள் எல்லை கடந்த அறியாமையின் யுகத்தில் இருந்தனர். உருவ வழிபாடு, மது, சூதாட்டம், விபச்சாரம், வட்டி வசூலித்தல் மற்றும் பல தீய செயல்கள் அவர்களிடையே பரவலாகிவிட்டிருந்தன. அவர்களின் இந்த மோசமான நிலைகளை முஹம்மத் அலைஹிஸ்ஸலாம் கடுமையாக வெறுத்தார்; அவர்களுடைய எல்லாத் தீய செயல்களிலிருந்தும் அவர் எப்போதும் விலகி இருந்தார்.

மக்காவாசிகள் அனைவரும் அதை அறிந்தனர், அவர்கள் அதைக் கண்டு வியந்தனர். அவர் சிலைகளை கடுமையாக வெறுத்ததால், அதனருகில் அவர் செல்லவே மாட்டார். சிலைகளுக்காகப் பலியிடப்பட்ட விலங்குகளின் இறைச்சியை அவர் உண்டதில்லை. அவரது குழந்தைப் பருவத்திலும் இளமைப் பருவத்திலும், ஜியாத் மலையிலும் அதன் சுற்றுப் புறங்களிலும் தனக்குச் சொந்தமான கால்நடைகளை மேய்த்து வந்தார். இதனால் அவர் தனது வாழ்வாதாரத்தைப் பெற்றார். இதனால், அவர் மிகவும் சீரழிந்த சமூகத்திலிருந்து விலகி இருப்பார். ஒருமுறை அஸ்ஹாப் அல் கிராம்களிடம் "ஆடுகளை மேய்க்காத எந்த நபியும் இல்லை" என்று அவர் கூறினார். "ரஸூலுல்லாஹ்! நீங்களும் மேய்த்தீர்களா?” அவரிடம் கேட்கப்பட்ட போது, அவர், “ஆம், நானும் அதனைச் செய்தேன்” என்றார்.

நமது அன்பான நபிக்கு இருபது வயது இருக்கும் போது, ​​மக்காவில் எந்தப் பாதுகாப்பு உத்தரவாதமும் இருக்கவில்லை. அக்கிரமம் மிகவும் பரவலடைந்திருந்தது; சொத்து, வாழ்க்கை மற்றும் கற்பு ஆகியவற்றின் பாதுகாப்பு மறைந்து போய்விட்டது. மக்காவாசிகள் வர்த்தகத்திற்காகவும், கஃபாவைப் பார்வையிடவும் வந்த வெளிப் பிரதேசத்தவர்களை ஒடுக்கினர். ஒடுக்கப்பட்டவர்கள் தங்கள் உரிமைகளை மீட்டெடுக்க எந்த வழியையும் காண முடியவில்லை. இதற்கிடையில், ஒரு யெமன் வியாபாரி ஒருவரின் பொருட்களை அஸ் இப்னு வாஇல் என்ற மக்காவாசி வலுக்கட்டாயமாக பறித்துக்கொண்டார். இந்த சம்பவத்திற்குப் பிறகு, அந்த யெமன்வாசி அபூ குபைஸ் மலைக்குச் சென்று, தனது உரிமைகளை மீட்டெடுக்க கோத்திரங்களிடம் உதவி கேட்டு அழுதார். கொடுமை உச்சக்கட்டத்தை எட்டியிருப்பதைத் தெளிவாகக் காட்டிய இந்த நிகழ்வுகளுக்குப் பிறகு, பனூ ஹாஷிம் கோத்திரத்தின் பிரமுகர்கள், பனூ ஸுஹ்ரா கோத்திரப் பிரமுகர்கள் மற்றும் பிற கோத்திரங்களின் பிரமுகர்கள், அப்துல்லாஹ் இப்னு ஜுத்ஆனின் வீட்டில் ஒன்று கூடினர். மக்கா வாசிகளோ அல்லது அந்நியரோ யாரும் ஒடுக்கப்பட மாட்டார்கள், கொடுமைகள் நிறுத்தப்படும், ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகள் திரும்பக் கொடுக்கப்படும் என்று அவர்கள் முடிவு செய்தனர். இந்த நோக்கத்திற்காக, அவர்கள் ஒரு நீதிக்கான சங்கத்தை நிறுவினார்கள்.1

நமது அன்பான நபி இளம் வயதிலேயே இணைந்த இந்த சங்கம், அதன் ஸ்தாபனத்தில் மிகவும் செல்வாக்கு மிக்கதாக இருந்தது. இச்சங்கம் ஹில்ஃப் அல்-ஃபுழூல் என்று அழைக்கப்பட்டது. இதற்கு முன்னர் இதேபோன்ற ஒரு சங்கத்தை ஃபழ்ல் மற்றும் ஃபுழைல் என்ற இரு நபர்கள் நிறுவியிருந்தனர். இந்தப் பெயர் அவர்களின் சங்கத்தைக் குறிக்கும் வகையில் கொடுக்கப்பட்டது. இந்த சங்கம் அநியாயங்களை நிறுத்தி மீண்டும் மக்காவில் பாதுகாப்பை அளித்து, அதன் விளைவை நீண்ட காலமாகத் தக்க வைத்துக் கொண்டது. நமது தலைவர் ரஸூலுல்லாஹ், நபித்துவம் அவருக்கு அறிவிக்கப்பட்ட பிறகு, ஒரு தடவை, அஸ்ஹாப் அல்கிராமிடம், "அப்துல்லாஹ் இப்னு ஜுத்ஆனின் வீட்டில் நடந்த சத்தியப்பிரமாணத்தில் நான் கலந்துகொண்டேன். அந்த ஒப்பந்தம் சிவப்பு நிற ஒட்டகங்களை விட எனக்கு மிகவும் விருப்பமானதாகும். இன்று, நான் அத்தகைய ஒரு கூட்டத்தில் கலந்து கொள்ள என்னை அழைத்தால், நான் பங்கேற்பேன்." என்று கூறினார்.2

"ஒரு முஸ்லிம் ஹலாலான முறையில் சம்பாதித்து, பிறரைச் சார்ந்திருக்காமல், தனது அண்டை வீட்டாருக்கும், உறவினர்களுக்கும் உதவி செய்தால், கியாமத் நாளில் அவர் முழு நிலவைப் போல பிரகாசமாக இருப்பார்."
ஹதீஸ் அஷ்-ஷரீஃப்

அவரது வர்த்தகம்

ஆரம்ப காலங்களிலிருந்தே, மக்காவாசிகள் வர்த்தகத்தில் ஈடுபட்டு, அதனூடாகத் தங்கள் வாழ்வாதாரத்தைப் பெற்றனர். எம் தலைவர் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் தந்தைவழி மாமாவான அபூதாலிப் வணிகத்திலும் ஈடுபட்டுள்ளார். எமது அன்பார்ந்த நபிக்கு இருபத்தைந்து வயதாக இருந்தபோது, ​​மக்காவில் பொருளாதார நெருக்கடிகள் மிகவும் தீவிரமடைந்தன. இதன் காரணமாக, மக்காவாசிகள் டமஸ்கஸ் செல்ல ஒரு பெரிய வர்த்தகக் கூட்டத்தைத் தயார் செய்தனர். அந்த நாட்களில், அபூதாலிப் எமது தலைவர் ரஸூலுல்லாஹ்விடம் வந்து, “என்னுடைய மரியாதைக்குரிய மருமகனே! வறுமை உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக நாங்கள் வறுமையிலும், பஞ்சத்திலும் இருந்தோம். அவை எமக்கு எதையும் விட்டுவைக்கவில்லை. இங்கே, குறைஷிகளின் வணிகக் கூட்டம் தயாராகி டமஸ்கஸுக்குப் புறப்பட உள்ளது. கதீஜா அம்மையாரும் இந்த வணிகக் கூட்டத்துடன் பொருட்களை அனுப்புவார். இந்த வேலையைச் செய்ய நம்பகமான ஒருவரை அவர் தேடுகிறார். நிச்சயமாக, அவருக்கு உங்களைப் போன்ற நம்பகமான, தூய்மையான மற்றும் விசுவாசமான ஒரு நபர் தேவைப்படுகிறார். நாம் போய் அவரிடம் பேசலாம். நீங்கள் துணையாகப் போக ஏற்பாடு செய்தால் நன்றாக இருக்கும். சந்தேகமின்றி அவர் மற்றவர்களை விட உங்களை விரும்புவார். நான் உண்மையில் நீங்கள் டமஸ்கஸ் செல்ல விரும்பவில்லை. டமஸ்கஸிலுள்ள யூதர்கள் உமக்குத் தீங்கு செய்யக்கூடும் என்று நான் பயப்படுகிறேன். இருப்பினும், வேறு எந்தத் தீர்வையும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை." என்று கூறினார். எமது தலைவர் நபிகள் நாயகம் அவரிடம், "உமது விருப்பம் போல் செய்யுங்கள்" என்று கூறினார்கள்.

ஹஸ்ரத் காதிஜா அரேபியாவில் தனது அழகு, செல்வம், புத்தி, தூய்மை மற்றும் நல்ல நடத்தை ஆகியவற்றால் பெரும் புகழ் பெற்ற ஒரு பெண்மணியாகத் திகழ்ந்தார். இதனால், சுற்று வட்டாரத்தில் இருந்து ஏராளமானோர் அவரை திருமணம் செய்து கொள்ள விரும்பினர். ஆனால், அவர் கண்ட கனவு காரணமாக, அவர் யாரையும் விரும்பவில்லை. அவரது கனவில், சந்திரன் வானத்திலிருந்து இறங்கி, அவரது மார்பில் நுழைந்தது; அதன் ஒளிக் கதிர்கள் அவரது விலாவில் இருந்து வெளிவந்து முழு பிரபஞ்சத்தையும் ஒளிரச் செய்தன. காலையில் தன் உறவினரான வரகா இப்னு நவ்பலிடம் தன் கனவைச் சொன்னார். அவர், "கடைசி யுகத்தின் நபி பிறந்திருக்கிறார். அவர் உங்களைத் திருமணம் செய்துகொள்வார். அத்துடன் உங்கள் காலப்பகுதியில் அவரிடம் வஹி3 வரும். அவருடைய மார்க்கத்தின் நூர் உலகத்தை நிரப்பும். நீங்கள் நம்பிக்கையாளர்களில் முதன்மையானவர். அந்த நபி குரைஷி மற்றும் பனீ ஹாஷிமைச் சேர்ந்தவர்." என்று விளக்கம் சொன்னார். ஹஸ்ரத் கதீஜா இந்தப் பதிலைக் கேட்டு மகிழ்ந்து, அந்த நபியின் வருகைக்காகக் காத்திருக்க ஆரம்பித்தார்.

ஹத்ரத் காதிஜா வர்த்தகத்தில் ஈடுபட்டார். அவர் உடன்படிக்கைக்கு வந்தவர்களுடன் வியாபாரக் கூட்டாண்மைகளை ஏற்படுத்தினார். அபூ தாலிப் எமது அன்னை ஹஸ்ரத் காதிஜாவிடம் நிலைமையைக் கூறினார். இதைக் கேட்ட ஹஸ்ரத் காதீஜா, ரஸூலுல்லாஹ்வை தன்னிடம் வந்து பேசும்படி அழைத்தார். நம்முடைய தலைவர் வந்தபோது, அவர் அவருக்கு மிகுந்த மரியாதையும் சங்கையும் வழங்கினார். எமது நாயகத்தின் நேர்த்தியையும், அவரது அழகிய முகத்தையும் அவர் பாராட்டினார். அவர் எமது நபியிடம், “நீங்கள் நேர்மையானவர், நம்பகமானவர், நல்ல நெறிமுறைகளைக் கொண்டவர் என்பதை நான் அறிவேன். இந்த வேலைக்காக நான் இதுவரை கொடுத்ததை விட அதிகமான தொகையை உங்களுக்கு தருகிறேன்..” எனப் பேசினார். சம்பளப் பேச்சுக்குப் பின், அன்னை ஹஸ்ரத் கதீஜா, ரஸுலுல்லாஹ்வுக்கு வேலைக்குத் தேவையான ஆடைகளைக் கொடுத்துவிட்டு, அமைதியான இதயத்துடன் அவரைத் தன் வீட்டிலிருந்து அனுப்பி வைத்தார். மேலதிகமாக, ரஸுலுல்லாஹ்வுக்கு பயணத்தில் அணிவதற்கு விலைமதிப்பற்ற ஆடைகளை அவரது அடிமையான மைஸராவிடம் வழங்கினார்.

எமது அன்னை ஹஸ்ரத் கதீஜா, ஒரு கற்றறிந்த கிறிஸ்தவரான அவரது தந்தைவழி மாமாவின் மகன் வரகா இப்னு நவ்பல் என்பவரிடமிருந்து நபித்துவத்தின் அடையாளங்களை அறிந்து கொண்டார். எனவே, நம் அன்பிற்குரிய நபியின் இந்த வருகையின் போது, ​​அவர் மீது நபித்துவத்தின் பண்புகளை அடையாளம் காண முடிந்தது. அதன் காரணமாக, அவர் தன் அடிமையான மைஸராவிடம், “வணிகக் கூட்டம் மக்காவை விட்டு வெளியேறும் நேரம் வரும்போது, ​​ஒட்டகத்தின் கடிவாளத்தை முஹம்மத் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களிடம் கொடுங்கள். அப்போதுதான் மக்காவாசிகள் வதந்திகளைப் பரப்ப மாட்டார்கள். நீங்கள் ஊருக்கு வெளியில் இருக்கும்போது, பிறரது கண்ணுக்குத் தெரியாமல் இருக்கும்போது, இந்த விலைமதிப்பற்ற ஆடைகளை அவர் அணியட்டும்." என்று ஆலோசனை கூறினார்.

பின்பு தன் அழகிய ஒட்டகத்தை சுல்தான்களுக்கு உகந்த முறையில் அணிவித்து, மைஸராவிடம், "அவர் ஒட்டகத்தின் மீது ஏறுவதற்கு மரியாதையுடன் உதவுங்கள். கட்டுப்பாட்டைப் பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் அவருடைய வேலைக்காரர் என்பதை அறிந்து கொள்ளுங்கள்! அவரின் அனுமதியின்றி எதையும் செய்யாதீர்கள். உங்கள் உயிருக்கு ஆபத்து வந்தாலும் அவரைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்! நீங்கள் செல்லும் இடங்களில் நேரத்தை வீணாக்காதீர்கள். சீக்கிரம் திரும்பி வாருங்கள். அப்போதுதான் நாம் ஹாஷிமீக்கள் முன்னிலையில் சங்கடப்பட மாட்டோம். நான் கூறிய அனைத்தையும் நீங்கள் சரியாகச் செய்தால், நான் உங்களை விடுதலை செய்து, நீங்கள் விரும்பும் பல பரிசுகளை உங்களுக்குத் தருவேன்." என்றார்.

"நான் ஒருபோதும் அந்த சிலைகள் மீது சத்தியம் செய்ய மாட்டேன்! நான் அவற்றைக் கடந்து செல்லும் போதெல்லாம், என் முகத்தை வேறு திசையில் திருப்புகிறேன்."
ஹதீஸ் அஷ்-ஷரீஃப்

வணிகக் கூட்டம் தயார் செய்யப்பட்டது; மக்காவாசிகள் தங்கள் உறவினர்களிடம் விடைபெற பெரிய குழுக்களாக ஒன்றாக வந்தனர். நமது அன்பார்ந்த நபியவர்களின் உறவினர்களும், அவரது மாமாக்களும், ஹாஷிமீ முதியவர்களும் அங்கு இருந்தனர். எங்கள் நபியின் மாமி, அல்லாஹு தஆலாவின் ரஸூல் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) வேலைக்காரனின் உடையில் ஒட்டகத்தின் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டிருப்பதைக் கண்டதும், அவரது முழங்கால்கள் வளைந்தன. அவர் அழுது, கண்ணீர் சிந்தினார். அழுதுகொண்டே அவர், “அப்துல்முத்தலிபே! ஸம்ஸம் கிணற்றைக் கண்டுபிடித்த மகத்தான மனிதரே! அப்துல்லாஹ்வே! உங்கள் மண்ணறைகளிலிருந்து எழுந்து இந்த பாக்கியம் பெற்றவரின் நிலையைப் பாருங்கள்!" என்று புலம்பினார். அபூ தாலிபின் உணர்ச்சிகளும், உணர்வுகளும் அதேபோலவே இருந்தன. ரஸூலுல்லாஹ் அவர்களின் கண்களில் முத்துக்கள் போல கண்ணீர் பொழிந்த வண்ணம், "என்னை ஒருபோதும் மறக்காதீர்கள். நான் வீட்டிலிருந்து வெகு தொலைவில் துக்கத்திலும் வேதனையிலும் இருக்கிறேன் என்பதை நினைவில் கொள்ளுங்கள்." என்று கூறினார். இந்த வார்த்தைகளைக் கேட்ட மக்கள் அனைவரும் அழுதுகொண்டிருந்தனர். வானத்திலுள்ள வானவர்களும் அவர்களுடன் சேர்ந்துகொண்டார்கள். அவர்கள், “எங்கள் ரப்பே! முஹம்மத் அலைஹிஸ்ஸலாம் அவர்களை உனது ஹபீப் ஆக்கி மிக உயர்ந்த பதவியை வழங்கினாய். இந்த சூழ்நிலையின் ஹிக்மத் என்ன?" என்று வினவினர். அப்போது அல்லாஹு தஆலா, “ஆம், அவர்தான் என்னுடைய ஹபீப். ஆனால் நீங்கள் அன்பின் இரகசியத்தை அறிய முடியாது. நேசிப்பவனுக்கும் நேசிக்கப்படுபவருக்கும் இடையே உள்ள ரகசியங்களை நீங்கள் புரிந்து கொள்ள முடியாது. இந்த நிலையை யாரும் அறிய முடியாது. இந்த மறைவான விஷயத்தில் இருந்து யாரும் எதையும் புரிந்து கொள்ள முடியாது." என்று பதிலளித்தான்.

ஹஸ்ரத் கதீஜாவின் கட்டளைப்படி, வணிகக் கூட்டம் மக்காவை விட்டு வெளியேறி, கண்ணுக்குத் தெரியாத இடத்திற்குச் சென்றபின், மைஸரா, நமது அன்பு நபிக்கு விலைமதிப்பற்ற ஆடைகளை அணிவதற்கு வழங்கினார். பல துணிகளால் மூடப்பட்டிருந்த, மிக அழகாக அலங்கரிக்கப்பட்ட ஒட்டகத்தின் மீது ஏற அவருக்கு உதவினார். ஒட்டகத்தின் கடிவாளத்தையும் எடுத்துக் கொண்டார்.

இந்த பயணத்தில், வணிகக் கூட்டத்தில் இருந்தவர்கள் உலகங்களுக்கு கருணையாக அனுப்பப்பட்ட எமது அன்பு நபிக்கு நிழல் தரும் மேகம் இருப்பதையும், பறவைகளின் உருவத்தில் இருந்த இரண்டு மலக்குகள் அவருடன் தங்கள் இடத்திற்கு வந்ததையும் கண்டனர்.4 பயணக் கூட்டத்தின் பின்னால், சோர்ந்து போன இரண்டு ஒட்டகங்களை நபியவர்கள் தனது அருள்மிகு கைகளால் அடித்தபின், ஒட்டகங்கள் விரைவாக நடக்கத் தொடங்கின. அதனையும் பல சம்பவங்களையும் கண்டவர்கள் அவரை மிகவும் நேசித்தனர். அவரது புகழ் பெரியதாக இருக்கப் போகிறது என்பதை உணர்ந்தனர்.

அவர்கள் புஸ்ராவிற்கு வந்ததும், மீண்டும் மடாலயத்திற்குப் பக்கத்தில் தரித்து நின்றார்கள். பல அத்தாட்சிகளைக் கண்டபின், அவர் கடைசி நபியாக இருப்பார் என்று புரிந்து கொண்ட பாதிரியார் பஹீரா இறந்துவிட்டார். அவருக்கு பதிலாக நஸ்தூரா என்ற ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார். மடாலயத்திற்கு அருகில் தரித்து நின்ற குறைஷிகளின் வணிகப் பேரணியைப் பார்த்துக் கொண்டிருந்த பாதிரியார் நஸ்தூரா, மரத்தின் அடியில் ஒருவர் அமர்ந்ததும், ஒரு பட்டுப்போன மரம் பச்சை நிறமாக மாறுவதைக் கண்டபோது, அவர் மைஸராவிடம், "மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் அந்த நபர் யார்?" என்று வினவினார். மைஸரா, "அவர் குறைஷிக் கோத்திரத்தில் ஹரமைச் சேர்ந்தவர்" என்று பதிலளித்தார். அப்போது நஸ்தூரா, "இதுவரை, நபிமார்களைத் தவிர வேறு யாரும் அந்த மரத்தடியில் அமர்ந்ததில்லை" என்றார். மேலும், "அவர் கண்களில் சிவப்பு நிறமுள்ளதா?" என்று கேட்டார். "ஆம், அவரிடம் உள்ளது, அது ஒருபோதும் நீங்கியதில்லை." என மைஸரா பதிலளித்தார். பின்னர் நஸ்தூரா, “ஈஸா அலைஹிஸ்ஸலாமுக்கு இன்ஜீலை அனுப்பிய அல்லாஹு தஆலாவின் பெயரால் கூறுகிறேன், நிச்சயமாக அவர் கடைசி நபியாக இருக்கப் போகிறார். அவர் நபித்துவத்தின் கட்டளையைப் பெறும் வரை நான் வாழ்ந்தால் போதும்" என்றார்.

முஹம்மத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் புஸ்ரா சந்தையில் கதீஜா அம்மையாரின் பொருட்களை விற்றுக்கொண்டிருந்தபோது, ​​​​ஒரு யூதர் பேரம் பேசும்போது அவரை நம்பவில்லை, "லாத் மற்றும் உஸ்ஸா என்று அழைக்கப்படும் சிலைகளின் மீது சத்தியம் செய்யுங்கள், நான் உன்னை நம்புவேன்" என்று கூறினார். அதற்கு, முஹம்மத் அலைஹிஸ்ஸலாம் “நான் அந்த சிலைகள் மீது சத்தியம் செய்ய மாட்டேன்! நான் அவற்றைக் கடந்து செல்லும் போதெல்லாம், என் முகத்தை வேறு திசையில் திருப்புகிறேன்." என்று கூறினார். நபியவர்களின் மற்ற அடையாளங்களையும் பார்த்த அந்த யூதர் அங்கிருந்தவர்களிடம், “உங்களது வார்த்தை சரியானது. இவர் ஒரு நபி என்று நான் சத்தியம் செய்கிறேன்.” என்றார். அத்துடன், "எங்கள் அறிஞர்கள் இந்த நபரின் பண்புகளை வேதங்களில் கண்டறிந்துள்ளனர்" என்று கூறி அவர் தனது வியப்பை வெளிப்படுத்தினார்.

மைஸரா எமது தலைவர் ரஸூலுல்லாஹ்வைப் பற்றி தான் கண்டதையும், கேட்டதையும் தன் மனதில் பதிந்து கொண்டார். அவர் மீதான அவருடைய அபிமானம் அதிகமாகிக் கொண்டே இருந்தது. மைஸராவின் இதயம் உலக நாயகத்தின் மீது அன்பால் நிறைந்தது. இப்போது, அவர் மிகுந்த அன்புடனும், மரியாதையுடனும் அவருக்கு சேவை செய்து, அவருடைய மிகச் சிறிய தேவைகளையும் மிகுந்த கவனத்துடன் நிறைவேற்றிக் கொண்டிருந்தார்.

பொருட்கள் விற்கப்பட்டன, நபியவர்களின் பாக்கியத்தால், வணிகம் வழக்கத்தை விட மிகவும் லாபகரமானதாக இருந்தது. வணிகக் கூட்டம் திரும்பும் பயணத்தை ஆரம்பித்தது. மர்ருஸ்ஸஹ்ரான் என்ற இடத்தை அடைந்ததும், மக்காவிற்கு நற்செய்தியை வழங்குமாறு மைஸரா எமது அன்பான நபியிடம் பரிந்துரைத்தார். எம் தலைவர் இதை ஏற்றுக்கொண்டு வணிகப் பேரணியை விட்டு, மக்காவிற்குப் புறப்பட்டார்.

நபீஸா பிந்த் முனிய்யா இவ்வாறு விவரிக்கிறார், "வணிகக் கூட்டத்தின் வருகைக்கான நேரம் நெருங்கிவிட்டது. ஒவ்வொரு நாளும், காதிஜாவும் அவரது பணியாளர்களும் அவரது வீட்டின் உச்சியில் வணிகக் கூட்டத்தின் வருகைக்காகக் காத்திருப்பார்கள். அத்தகைய ஒரு நாளில், நான் அவருடன் இருந்தேன். திடீரென்று, ஒரு ஒட்டகத்தின் மீது ஒரு நபர் தூரத்தில் தோன்றினார். மேகமும், பறவைகளின் தோற்றத்தில் வந்த இரு மலக்குகளும் (அவரைச் சூழ்ந்து) நிழலிட்டனர். நமது நபிகளாரின் அருள்பெற்ற நெற்றியில் உள்ள நூர் சந்திரனைப் போல் பிரகாசித்தது. வருபவர் யார் என்று கதீஜா புரிந்துகொண்டார். அவரது இதயம் இலகுவாக உணர்ந்தது. ஆனால் அவர் யார் என்று தெரியாதது போல் நடித்தவர், "இந்த வெப்பமான நாளில் வருபவர் யார்? " என்று கேட்டார். பணியாளர்கள், “வருபவர் முஹம்மத் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களைப் போல் இருக்கிறார்” என்று கூறினார்கள். அவர்கள் நேரில் பார்த்ததைக் கண்டு அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். சிறிது நேரத்தில், எமது தலைவர் ரஸூல் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) எமது தாயார் காதீஜாவின் மாளிகைக்கு வந்து, நிலைமையை அவரிடம் கூறினார். அவர் கொண்டு வந்த நற்செய்தியால் அவரை மிகவும் மகிழ்ச்சியடையச் செய்தார்.

சிறிது நேரம் கழித்து, வணிகக் கூட்டம் மக்காவிற்குள் நுழைந்தது. மைஸரா எமது அன்னை ஹஸ்ரத் கதீஜாவிடம், எமது நபிக்கு பயணத்தின் போது எப்படி நிழல் வழங்கப்பட்டது, பாதிரியார் நஸ்தூரா என்ன சொன்னார், பலவீனமான ஒட்டகங்கள் எப்படி வேகமாகப் பயணித்தன மற்றும் அவர் கண்ட பல அசாதாரண விஷயங்களை விவரித்தார். நபிகள் நாயகத்தை தன்னால் இயன்றவரை புகழ்ந்தார். ஹஸ்ரத் கதீஜா இவற்றை ஏற்கனவே அறிந்திருந்தார். ஆனால் அவருடைய வார்த்தைகள் அவரது யகீனை (தளராத நம்பிக்கையை) அதிகரித்தன. "இந்தப் பயணத்தில் நீர் கண்டதை யாரிடமும் சொல்லாதீர்" என்று மைஸராவை அவர் எச்சரித்தார்.5

எங்கள் தாயார் கதீஜா அவர்கள் தான் கேட்டதைத் தெரிவிக்க வரகா இப்னு நவ்பல் அவர்களிடம் சென்றார். மிகவும் வியப்புடன் நடந்ததைக் கேட்ட வரக்கா, "ஓ கதீஜா, நீங்கள் சொல்வது உண்மையாக இருந்தால், முஹம்மத் அலைஹிஸ்ஸலாம் இந்த உம்மத்தின் நபியாக இருப்பார்." என்றார்.

எமது தலைவரான நபிக்கு 12 வயதாக இருந்தபோது, ​​அவர் தனது மாமா அபூதாலிபுடன் வியாபாரத்திற்காக புஸ்ராவுக்குச் சென்றார். அவருக்கு 17 வயதாக இருந்தபோது, ​​அவர் தனது மாமா ஜுபைருடன் யெமன் தேசம் சென்றார். 20 வயதில், ஹஸ்ரத் அபூபக்ருடன் டமஸ்கஸுக்குச் சென்றார். அவருக்கு 25 வயதாக இருந்தபோது, ​​ஹஸ்ரத் கதீஜாவின் பொருட்களை விற்பதற்காக மீண்டும் டமஸ்கஸுக்குச் சென்றார்.6

இவ்வாறு, அவர் சரியாக நான்கு முறை பயணம் செய்தார். இவற்றைத் தவிர அவர் வேறு எங்கும் பயணம் செய்யவில்லை.

எமது அன்னை ஹஸ்ரத் கதீஜாவுடன் அவரது திருமணம்

"இந்தப் பொருட்கள் அனைத்தும் உங்கள் நல்ல சுயத்திற்கு சொந்தமானவை. எனக்கு நீங்கள் தேவை, நான் உங்களுக்கு நன்றியுள்ளவனாக இருக்கிறேன்."
கதீஜா துல்-குப்ரா (ரழியல்லாஹு அன்ஹா)

வரகா இப்னு நவ்பல் அறிவித்த நற்செய்தியைக் கொண்டு, நம்முடைய அன்பார்ந்த நபியவர்களின் அழகிய குணத்தைப் பார்த்த பிறகு, அவரை மணந்து, அவருக்கு சேவை செய்வதன் மூலம் கௌரவிக்கப்பட வேண்டும் என்று எமது தாய் ஹஸ்ரத் கதீஜா விரும்பினார். நபீஸா பின்த் முனிய்யா அவரது உணர்வுகளைப் புரிந்து கொண்டு, மத்தியஸ்தப் பாத்திரத்தை ஏற்றுக்கொண்டார். இந்த நோக்கத்துடன், அவர் ரஸூல் அல்-அக்ரமின் உன்னதமான முன்னிலையில் சென்று, “முஹம்மதே! திருமணம் செய்வதிலிருந்து உங்களைத் தடுப்பது எது?" என்று கேட்டார். அதற்கு நம் நபியவர்கள், “என்னிடம் திருமணம் செய்து கொள்ள போதுமான பணம் இல்லை” என்று பதிலளித்தார்கள். அதற்கு நபீஸா, “முஹம்மதே! நீங்கள் கற்பும், கௌரவமும், செல்வமும், அழகும் கொண்ட ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்பினால், அதைச் செய்ய நான் உதவத் தயாராக இருக்கிறேன்." என்று கூறினார். நம் அன்பான நபியவர்கள், “அவர் யார்?” என்று கேட்டார்கள். "அவர்தான் கதீஜா பின்த் ஹுவைலித்" என்று நபீஸா பதிலளித்தார். "யார் மத்தியஸ்தராக இருப்பார்கள்?" என்று எமது ரஸூலுல்லாஹ் கேட்டபோது, அவர், "நான் இருப்பேன்" என்று கூறிவிட்டு, அங்கிருந்து வெளியேறினார். அவர் ஹஸ்ரத் கதீஜாவிடம் சென்று இந்த நற்செய்தியை அறிவித்தார்.

ஹஸ்ரத் கதீஜா தனது உறவினர்களான அம்ர் இப்னு அஸத் மற்றும் வரகா இப்னு நவ்பலை அழைத்து நிலைமையை விளக்கினார். எம் தலைவர் ரஸூலுல்லாஹ்வுக்கும் செய்தி அனுப்பி குறிப்பிட்ட நேரத்தில் வருமாறு அழைப்பு விடுத்தார். அபூ தாலிபும், அவருடைய சகோதரர்களும் ஆயத்தங்களைச் செய்து, எமது நபிகள் நாயகத்துடன் சென்றனர்.

எமது தாயார் ஹஸ்ரத் கதீஜா தனது வீட்டை அலங்காரங்களால் அலங்கரித்தார். இந்த நாளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, அவர் தனது நகைகள் அனைத்தையும் தனது அடிமைகளான வேலையாட்களுக்கு பரிசாக அளித்தார். பின்னர் அவர் அவர்களை விடுதலை செய்தார். எமது தலைவர் ரஸூலுல்லாஹ், எமது தாயார் ஹஸ்ரத் கதீஜாவின் இல்லத்தை தனது மாமாக்களுடன் கௌரவித்தார். அங்கு அபூ தாலிப் பேசத் தொடங்கினார்: "எம்மைப் படைத்தவனுக்கு எல்லாப் புகழும் உரியதாகும். இப்ராஹீமின் சந்ததியினரிலும், இஸ்மாயீலின் சந்ததியினரிலும் நம்மைத் தேர்ந்தெடுத்தான். அவன் எங்களை பைத்துல்லாஹ்வின் பாதுகாவலர்களாக ஆக்கினான். அவன் நம் அனைவர் மீதும் மனிதர்களின் கிப்லாவும் உலகங்கள் சுற்றி வருகின்ற புனித வீடுமான ஹரம் அஷ்ஷரீஃபின் மூலம் அருள் பொழிந்துள்ளான். அவன் அதனை எல்லாத் தீமைகளிலிருந்தும் பாதுகாக்கிறான். எனது சகோதரன் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மத், குறைஷிகளில் யாருடன் ஒப்பிடப்பட்டாலும் அவர்தான் மேன்மையானவர். அவரிடம் அதிக சொத்துக்கள் இல்லை. ஆனால் சொத்து உண்மையான மதிப்பு அல்ல. ஏனெனில் சொத்து ஒரு நிழல் போன்றது. அது கைகளில் இருந்து கைகளுக்கு சென்றுகொண்டே இருக்கிறது. என் மருமகனின் மகிமையும் மேன்மையும் உங்கள் அனைவருக்கும் தெரியும். இப்போது அவர் கதீஜா பின்த் ஹுவைலிதை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார். எனது சொத்திலிருந்து நீங்கள் எவ்வளவு மஹர்7 பெற விரும்புகிறீர்கள்? நான் சத்தியம் செய்கிறேன், முஹம்மதின் அந்தஸ்து உயர்ந்ததாக இருக்க வேண்டும்."

வரகா இப்னு நவ்பல் அவரது கூற்றை உறுதிப்படுத்தினார். ஹஸ்ரத் கதீஜாவின் தந்தைவழி மாமா, அம்ர் இப்னு அஸத், "நான் கதீஜா பின்த் ஹுவைலித்தை முஹம்மத் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் மணந்து கொள்ள சாட்சியாக இருக்கிறேன்” என்று கூறினார். அதன்மூலம், நிகாஹ் (திருமண) ஒப்பந்தம் நிறைவடைந்தது. ஒரு அறிவிப்பின் படி, மஹர் என்பது 400 மித்கால் தங்கம், மற்றொரு அறிவிப்பின் படி, அது 500 திர்ஹம், மற்றொரு அறிவிப்பின் படி, அது 20 ஒட்டகங்கள் என்பதாக வந்துள்ளது.8[ஒரு மித்கால் என்பது, நான்கு கிராம் எண்பது சென்றிகிராம் ஆகும்.]

அபூ தாலிப் திருமண விருந்துக்காக ஒரு ஒட்டகத்தை அறுத்து, முன்னோடியற்ற, ஒரு சிறப்பான விருந்தை வழங்கினார். திருமணம் நடந்து முடிந்தது. எமது தாய் ஹஸ்ரத் கதீஜா தனது செல்வங்கள் அனைத்தையும் எமது நபிகள் நாயகத்திற்குப் பரிசளித்து, "இந்தப் பொருட்கள் அனைத்தும் உங்கள் நல்ல சுயத்திற்கு சொந்தமானவை. எனக்கு நீங்கள் தேவை. நான் உங்களுக்கு நன்றியுள்ளவனாக இருப்பேன்." என்று கூறினார்.

எமது தாயார் ஹஸ்ரத் கதீஜா அவர்களின் திருமண வாழ்க்கை முழுவதும் எமது நபி முஹம்மத் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு எப்போதும் சேவை செய்தார். எமது அன்னை கதீஜா மறையும் வரை எமது தலைவர் நபியின் இந்தத் திருமண வாழ்வு இருபத்தைந்து ஆண்டுகள் நீடித்தது. இந்தத் திருமணத்தின் பதினைந்து வருடங்கள் பிஃஸத்திற்கு (அவரது நபித்துவத்தைப் பற்றி அவருக்கு அறிவிக்கப்படுவதற்கு) முன்னும், பத்து வருடங்கள் பிஃஸத்திற்குப் பின்னும் இருந்தன. நமது நபி முஹம்மத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஹஸ்ரத் கதீஜா உயிருடன் இருக்கும் போது வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ளவில்லை. அவருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் மற்றும் நான்கு பெண்கள் என ஆறு குழந்தைகள் இருந்தனர். அவர்களின் பெயர்கள் காஸிம், ஸைனப், ருகையா, உம்மு குல்ஸும், பாத்திமா மற்றும் அப்துல்லாஹ் (தாயிப் அல்லது தாஹிர்). நபியவர்களுக்கு ஹஸ்ரத் மாரியா மூலம் இப்ராஹீம் என்ற மகனும் பிறந்தார். அவரை அவர் நபித்துவக் காலப்பகுதியில் திருமணம் செய்தார். மற்ற மனைவிகள் மூலம் அவருக்குக் குழந்தைகள் பிறக்கவில்லை. ஸைனப் அவருடைய மகள்களில் மூத்தவர். அவரது இளைய மகள் பாத்திமா, தந்தைக்கு மிகவும் பிரியமானவர். அவர் ஹிஜ்ரத்துக்குப் பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தார். அவரது மகன்கள் இளம் வயதிலேயே இறந்துவிட்டனர். அத்துடன் ஹஸ்ரத் பாத்திமாவைத் தவிர அவரது மகள்கள் அனைவரும் அவருக்கு முன்பே இறந்துவிட்டனர். எமது தாயார் பாத்திமா நபியவர்கள் இறந்து ஆறு மாதங்களுக்குப் பிறகு காலமானார். எமது அன்பிற்குரிய நபி முஹம்மத் அலைஹிஸ்ஸலாமின் பரம்பரை ஹஸ்ரத் பாத்திமாவின் குழந்தைகள் மூலம் தொடர்ந்தது.9

எம் தலைவர், ரஸூல் அல்-அக்ரம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) எம் தாயார் கதீஜாவை மணந்த பிறகும் தனது வர்த்தகத்தைத் தொடர்ந்தார். அவர்கள் சம்பாதித்த பணத்தில், விருந்தினர்களுக்கு தங்குமிடம் அளித்து, அனாதைகளுக்கும் ஏழைகளுக்கும் உதவி செய்தனர்.

ஸைத் இப்னு ஹாரிஸா

ஸைத் இப்னு ஹாரிஸா ஒரு குழந்தையாக இருந்தபோது, ​​அவர் தனது தாய் ஸுஃதாவுடன் தனது உறவினர்களைப் பார்க்கச் சென்றிருந்தார். அவர்கள் அங்கிருந்தபோது மற்றொரு கோத்திரத்தினர் அவர்களைத் தாக்கினர். அவர்கள் ஸைதைக் கைப்பற்றினர். அவரை அடிமையாக விற்க மக்காவில் உள்ள ஸூக் அல்-உகாஸ் சந்தைக்கு அழைத்துச் சென்றனர். ஹஸ்ரத் கதீஜாவின் மருமகன் ஹாகிம் இப்னு ஹிஸாம், 400 திர்ஹம்களுக்கு ஸைதை வாங்கினார். ஹாகிம் இப்னு ஹிஸாம் அவரை தனது தந்தைவழி மாமியான ஹஸ்ரத் கதீஜாவுக்குப் அன்பளிப்பாக வழங்கினார். அவர் ஸைதை எமது நபிகள் நாயகத்திற்கு அன்பளிப்பு செய்தார். எமது தலைவர், நபியவர்கள் அவரை உடனடியாக விடுவித்தார். ஆனால் அவரைத் தன் பக்கத்தில் இருக்கச் செய்தார். விடுதலையான ஸைத் இப்னு ஹாரிஸாவுக்கு செல்ல வேறு இடமும் இருக்கவில்லை; அவரைக் கவனித்துக்கொள்ள ரஸூலுல்லாஹ்வை விட சிறந்த யாரும் இருக்கவுமில்லை. எனவே, அவர் மகிழ்ச்சியுடன் ரஸூலுல்லாஹ்விடம் தங்கினார். 

ஸைத் இப்னு ஹாரிஸா, நமது நபியவர்களால் சிறந்த முறையில் நடத்தப்பட்டார். அவரது நபித்துவம் அவருக்கு அறிவிக்கப்படுவதற்கு முன்பே நீதி, கருணை, இரக்கம், மனிதாபிமானம், பெருந்தன்மை, பரிவு, வாக்குறுதியைக் காப்பாற்றல், தொண்டு புரிதல், தாராள மனப்பான்மை, நம்பகத்தன்மை, ஒடுக்கப்பட்டவர்களையும் ஏழைகளையும் பாதுகாத்தல், அன்பு காட்டுதல் போன்ற புலப்படும் அல்லது புலப்படாத, அறியப்பட்ட அல்லது அறியப்படாத ஒவ்வொரு நல்ல நெறிமுறைகளும் அவரிடம் நிறைவாகக் காணப்பட்டன. அத்துடன் அவரிடம் குழந்தைகளைப் அன்பாகப் பராமரித்தல், நேர்மை, உண்மை, மரியாதை, அடக்கம், மிதமான தன்மை, மக்களை மென்மையாக கையாள்தல், துணிச்சல் போன்ற குணாம்சங்களும் முழுமையாகக் காணப்பட்டன. உலகிற்கு வந்த மற்றும் வரப்போகும் அனைத்து உயிரினங்களிலும் உயர்ந்தவராக அவர்தான் உள்ளார். அவர் அனைவரின் நம்பிக்கையையும் பெற்று "அல்-அமீன்" என்று அறியப்பட்டவர்; எமது நபிகள் நாயகத்தை தனது தந்தை மற்றும் தாயை விட அதிகமாக நேசித்த ஸைத் இப்னு ஹாரிஸா, அவரை விட்டுச் செல்ல விரும்பவில்லை.

அவரது தந்தை ஹாரிஸா, தனது மகனைத் தேடி அலைந்து திரிந்து கொண்டிருந்தார். யெமனில் இருந்து பல்வேறு நாடுகளுக்குப் பயணித்த தனது உறவினர்கள் மற்றும் அறிமுகமானவர்களிடம், தனது மகன் ஸைத் பற்றிய செய்திகளைக் கொண்டு வரும்படி கேட்டுக் கொண்டார். அவர் கவிதைகள் சொல்லிக் கொண்டு கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தார்.

நான் எனது ஸைதுக்காக அழுதேன்; அவன் என்ன செய்தான் என்று எனக்குத் தெரியவில்லை.

அவன் உயிருடன் இருக்கிறானா அல்லது இறந்து விட்டானா?

வீணாக அவனைக் கேட்காதே என் இதயமே!

அவனுடைய கல்லறை வயலில் உள்ளதா அல்லது பக்கமாகச் சாய்ந்துள்ளதா என்பதை நீ அறிய முடியாது.

""நான் உங்களை விட அதிகமாக யாரையும் நேசித்ததில்லை. எனது தந்தை மற்றும் மாமா இருவருமே நீங்கள்தான். நான் உங்களுடன் இருக்கவே விரும்புகிறேன்."
ஸைத் இப்னு ஹாரிஸா (ரழி-அல்லாஹு அன்ஹ்)

தனது மகனுக்கான அவரது ஏக்கம் பற்றி மற்றொரு கவிதை:
என் மகனே! ஸைத்! சென்றவர்கள் திரும்பி வருவார்கள் என்று நான் அறிந்திருந்தால்!
உன்னைத் தவிர வேறு யாரும் திரும்புவதை நான் விரும்பவில்லை.
காற்று வீசும் போது நான் அவரது நினைவில், ஒரு குழந்தையைப் பார்க்கும் போது நான் அவரது நினைவில்,
சூரியன் ஒவ்வொரு காலையிலும் உயரும் போது அது உன்னை எனக்கு நினைவூட்டுகிறது.
என் நேசனைக் குறித்து அழுதுகொண்டிருக்கிறேன்; ஆயிரம்முறை அழுதுகொண்டிருக்கிறேன்;
நான் பாழாய்ப்போனாலும், என் குதிரையின்மேல் ஏறி, அவனைத் தேடுகிறேன்.
என் குதிரைக்கும் எனக்கும் ஓய்வு அல்லது சோர்வு தெரியாது.
அப்போதுதான என் மகனைக் கண்டுபிடிப்பது சாத்தியமாகும்.
ஆயினும், நம்பிக்கை ஒரு மனிதனை முட்டாளாக்குகிறது; அது இறுதியில் அழிந்துபோகிறது.
என் மகன்களே! கைஸ், அம்ர், யஸீத், ஜபல்! ஸைத் உம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளான்.

இறுதியில், இஸ்லாத்தின் வருகைக்கு முன்பு, கஃபாவைத் தரிசிக்க வந்த பனீ கல்ப் கோத்திரத்தைச் சேர்ந்த சிலர் ஹஸ்ரத் ஸைதைக் கண்டு அடையாளம் கண்டுகொண்டனர். ஹஸ்ரத் ஸைத் அவர்களிடம், "என் குடும்பம் எனக்காக அழுவதை நான் அறிவேன். இந்தக் கவி வரிகளை அவர்களுக்குத் தெரிவியுங்கள்" என்று கூறி, இந்தக் கவிதையைப் படித்தார்:

என் இதயம் தீயில் எரிகிறது; நான் வீட்டிலிருந்து தொலைவில் இருக்கிறேன்,
என் பெற்றோரிடமிருந்து நான் தொலைவில் இருந்தாலும், நான் கஃபாவின் அயலவன்.
உனது வேதனையை உன் இதயத்தில் எரிய விடாதே,
உன் அழுகை வானத்தை எட்ட விடாதே.
இப்படிப்பட்ட வீட்டில் நான் இருப்பதற்காக மவ்லாவுக்குப் பாராட்டுக்கள்.
எனக்குக் காட்டப்பட்ட கௌரவத்திற்கும் தயவிற்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.

இந்தச் செய்தியைக் கேட்டதும் ஹாரிஸா மிகவும் மகிழ்ச்சியடைந்தார். உடனே பெருந்தொகையை எடுத்துக் கொண்டு அண்ணன் கஅபுடன் மக்காவிற்கு வந்தார். அவர்கள் வந்ததும், நம்முடைய நபியின் வீடு எங்குள்ளது என்பதை அவர் அறிந்து கொண்டார். அவர் நபியவர்களிடம் கூறினார், “குரைஷ் கோத்திரத்தின் தலைவரே, அப்துல்முத்தலிபின் பேரனே, பனீ ஹாஷிம் வம்சத்தின் மகனே! நீங்கள் ஹரம் அஷ்-ஷரீப்பின் பக்கத்து வீட்டுக்காரர். நீங்கள் உங்கள் விருந்தினர்களை உபசரிக்கிறீர்கள், உங்கள் அடிமைகளை விடுவித்து, அவர்களை சிறையிலிருந்து விடுதலை வழங்குகிறீர்கள். உங்கள் அடிமையான என் மகனைக் காப்பாற்ற எவ்வளவு பணம் வேண்டுமானாலும் கொடுப்போம். அவரை விடுதலை செய்யுங்கள்; தயவு செய்து எங்கள் விருப்பத்தை நிராகரிக்காதீர்கள்!"

அதற்கு, எமது நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள், "நாம் ஸைதை அழைத்து நிலைமையை அவருக்கு அறிவிப்போம். அவர் முடிவு செய்யட்டும். அவர் உங்களுடன் செல்ல விரும்பினால், நீங்கள் அவரை அழைத்துக் கொண்டு எனக்குப் பணம் கொடுக்காமல் போகலாம். ஆனால், அவர் என்னைத் தேர்ந்தெடுத்து என்னுடன் இருக்க விரும்பினால், நான் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்கிறேன், என்னைத் தேர்ந்தெடுத்தவரை நான் யாருக்கும் விட்டுவிட மாட்டேன்; அவர் என்னுடன் இருப்பார்."

எமது நபியின் இந்தப் பதிலால் ஹாரிஸாவும் அவரது சகோதரரும் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். "நீங்கள் எங்களை மிகவும் நியாயமாகவும் மனசாட்சியுடனும் நடத்தியுள்ளீர்கள்!" என்றனர்.

பின்னர் நமது தலைவர், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸைதை தம்மிடம் வரவழைத்து, "இந்த மனிதர்களை நீங்கள் அறிவீர்களா?" என்று வினவ, அதற்கு அவர், "ஆமாம், அவர்களில் ஒருவர் என் தந்தை, மற்றவர் என் மாமா" என்றார். அப்போது நமது நபியவர்கள், "ஸைதே! நான் யார் என்பதை நீங்கள் கற்றுக் கொண்டீர்கள்; என் தயவையும், இரக்கத்தையும், நான் உங்களை எப்படி நடத்துகிறேன் என்பதையும் நீங்கள் கண்டிருக்கிறீர்கள். இந்த மக்கள் உம்மை அழைத்துச் செல்ல வந்துள்ளனர். எனவே, என்னைத் தேர்ந்தெடுத்து என்னுடன் இருங்கள் அல்லது அவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுடன் போய்விடுங்கள்" என்று கூறினார்.

அவரது தந்தையும் மாமாவும் அவர் அவர்களை விரும்புவார் என்றும் அவர்கள் ஜைதை வீட்டிற்கு அழைத்து வர முடியுமென்றும் எதிர்பார்த்தனர். ஸைத் நபியவர்களிடம், "நான் உங்களை விட அதிகமாக யாரையும் நேசித்ததில்லை. எனது தந்தை மற்றும் மாமா இருவருமே நீங்கள்தான். நான் உங்களுடன் இருக்கவே விரும்புகிறேன்." என்று கூறினார்.

அவரது தந்தை மற்றும் மாமா அதிர்ச்சியடைந்தனர். அவரது தந்தை கோபமடைந்து ஸைதை நோக்கி, "நீ வெட்கப்பட வேண்டும்! நீ சுதந்திரத்தை விடவும், உனது தாய், தந்தை மற்றும் மாமாவை விடவும் அடிமைத்தனத்தை விரும்புகிறாயா?" என்று கேட்டார். ஸைத் தனது தந்தைக்குப் பதிலளித்தார், "தந்தையே, நான் இவரிடமிருந்து அத்தகைய இரக்கத்தையும் நல்லுபசரிப்பையும் கண்டேன். அவரை விட யாரையும் என்னால் நேசிக்க முடியாது."

எமது நபிகள் நாயகம் ஸைதை மிகவும் நேசித்தார். தன் மீதுள்ள விசுவாசத்தையும் பாசத்தையும் கண்ட பிறகு, அவரை கஃபா அல்-முஅஸ்ஸமாவுக்கு அருகில் ஹிஜ்ர் என்ற இடத்திற்கு அழைத்து வந்து மக்களிடம், “இதற்கு சாட்சியாக இருங்கள்! ஸைத் என் மகன். நான் அவருடைய வாரிசு; அவர் என்னுடைய வாரிசு." என்று பிரகடனம் செய்தார். இதைக் கண்ட ஸைதின் தந்தையினதும் மாமாவினதும் கோபம் மறைந்து போனது. அவர்கள் மகிழ்ச்சியுடன் தாயகம் திரும்பினர். அதன்பிறகு, அஸ்ஹாப் அல்-கிராம் ஸைதை, ஸைத் இப்னு முஹம்மத் (முஹம்மதின் மகன்) என்று அழைத்தனர். பிற்காலப் பகுதியில், அல்லாஹு தஆலாவால் தத்தெடுப்பு தடைசெய்யப்பட்டதுன், ஸூரா அல்-அஹ்ஸாபின் 5ஆவது வசனத்தில், “உங்கள் பிள்ளைகளை அவர்களின் தந்தையின் பெயரைச் சொல்லி அழையுங்கள், அது அல்லாஹ்வின் பார்வையில் மிகவும் நியாயமானது” என்றும், 40ஆவது வசனத்தில், “முஹம்மத் (அலைஹிஸ்ஸலாம்) உங்களில் (ஸைத் போன்ற) எவருக்கும் தந்தை அல்ல” என்றும் கூறப்பட்டுள்ளன. எனவே, அதன் பின்பு ஸைத் தனது தந்தையின் பெயருடன், அதாவது, ஹாரிஸாவின் மகன் ஸைத் (ஸை இப்னு ஹாரிஸா) என்று அழைக்கப்படலானார்.10

கஃபா நடுவர் தீர்ப்பு

நமது நாயகம் ரஸூலுல்லாஹ்வுக்கு முப்பத்தைந்து வயதாக இருந்தபோது, அவர் கஃபாவின் ஒரு விடயத்தில் நடுவராக இருந்தார். அந்த நேரத்தில், மழை மற்றும் வெள்ளம் கஃபாவின் சுவர்களை அழித்துவிட்டிருந்தன. அதற்கு மேலதிகமாக ஒரு தீ கஃபாவை சேதப்படுத்தியிருந்தது.11 எனவே கட்டமைப்பை மீண்டும் கட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, குரைஷியர்கள் கஃபாவை ஹஸ்ரத் இப்ராஹீம் கட்டிய தளம் வரை இடித்து மீண்டும் கட்டத் தொடங்கினர். அவர்கள் ஒவ்வொரு கோத்திரத்திற்கும் ஒரு பகுதியை கொடுத்து சுவர்களைக் கட்டினார்கள். இந்த வேலை ஒரு பெரிய கௌரவம் என்பதை அறிந்ததால், ஹஜர் அல் அஸ்வத் கல்லை வைப்பது குறித்து கோத்திரங்களிடையே ஒருமித்த கருத்து நிலவவில்லை. ஒவ்வொரு கூட்டத்தாரும் (தங்களுக்குரிய) இந்த கௌரவத்தைப் பெற்றுக் கொள்ள நாடினார்கள். “எம்மைத் தவிர வேறு யாரேனும் இந்த வேலையைச் செய்தால் நாங்கள் இரத்தம் சிந்திப் போராடுவோம்” என்று அப்துத்தாரின் மகன்கள் சத்தியம் செய்தார்கள். நான்கைந்து நாட்கள் நீடித்த இந்த கருத்து வேறுபாடு கிட்டத்தட்ட ரத்தம் சிந்தும் நிலைக்கு வந்தது.

ஒரு திங்கட்கிழமை, அப்துல்முத்தலிபின் தாய்வழி மாமாவும் மரியாதைக்குரிய பெரியவருமான ஹுஸைபா இப்னு முகீரா, “ஓ குரைஷ் சமூகமே! உங்கள் தகராறில் தீர்ப்பளிக்க, இந்த வாயிலால் முதலில் நுழையும் நபரை நடுவராக ஆக்குங்கள்” என்று கூறி, கஃபாவின் திசையில் திறக்கப்பட்டிருந்த பனீ ஷைபா வாயிலைக் காட்டினார். அவர்கள் இந்த முன்மொழிவை ஏற்றுக்கொண்டு, பனீ ஷைபா வாயிலைப் பார்த்து, அந்த மிக முக்கியமான தருணத்தில் முதலில் நுழைந்து, சிக்கலைத் தீர்க்கும் நபருக்காக காத்திருக்கத் தொடங்கினர். இறுதியில், அவர்கள் யாருடைய நேர்மையையும் உயர்ந்த ஒழுக்கத்தையும் அவர்கள் மிகவும் பாராட்டினார்களோ அந்த முஹம்மத் அலைஹிஸ்ஸலாம் வருவதைக் கண்டார்கள். அவரை அவர்கள் அல்-அமீன் அதாவது எப்போதும் நம்பகமானவர் என்று அழைத்தார்கள். அவர்கள், “இதோ அல்-அமீன் வருகிறார். அவருடைய தீர்ப்பை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்." என்றனர்.

நமது அன்புக்குரிய நபிகள் நாயகம் முஹம்மத் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் நிலைமை விளக்கப்பட்டதும், அவர் தனது மேலங்கியைக் கழற்றி தரையில் வைத்தார். அவர் ஹஜர் அல்-அஸ்வத்தை தனது அருள்மிகு மேலங்கியின் மீது வைத்து, "ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும் ஒருவர் ஒரு மூலையைப் பிடிக்கட்டும்" என்று கூறினார். பின்னர், அவர் அந்தக் கல்லைத் தம் கைகளில் எடுத்து, அதைத் தமது புனிதமான கைகளால் அதன் இடத்திலேயே வைத்தார். இந்த நடவடிக்கையால், வரவிருந்த போர் தடுக்கப்பட்டதைக் கண்டு, கோத்திரத்தவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். பின்னர், அவர்கள் கட்டுமானத்தை தொடர்ந்து, அவர்கள் விட்டுவிட்ட இடத்திலிருந்து சுவர்களைக் கட்டி முடித்தனர்.12

"முஹம்மத் அலைஹிஸ்ஸலாம் தனது அருள்மிகு ஹிர்கா - மேலங்கி மீது ஹஜர் அல்அஸ்வத்தை வைத்து, "ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும் ஒருவர் ஒரு மூலையைப் பிடிக்கட்டும்" என்று கூறினார்.
எமது அன்பு நபி முஹம்மத்-அல் அமீன் (ஸல்-அல்லாஹு அலைஹி வஸல்லம்)