முன்னுரை
ஹம்த் (பாராட்டு மற்றும் நன்றி) மற்றும் அவன் வழங்கிய அருள்களுக்கும் நல்ல நிலைகளுக்கும் அளவற்ற நன்றிகள் அல்லாஹு தஆலாவுக்கே உரித்தாகட்டும்... உண்மையைப் பேசுபவர்களில் சிறந்தவரும், தெளிவும் ஞானமும் அருளப்பட்டவர்களில் உயர்ந்தவருமான எங்கள் உரிமையாளரும் தலைவருமான முஹம்மத் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு பிரார்த்தனைகளும் ஸலாம்களும் உண்டாகட்டும்! அந்த உயர்ந்த நபியின் தூய அஹ்லுல் பைத்துக்காகவும், அவருடைய நீதியும் விசுவாசமும் கொண்ட அஸ்ஹாப் ஒவ்வொருவருக்காகவும் பிரார்த்தனைகள் உரித்தாகட்டும்.
மக்களை அலங்கரிப்பதும், அவர்களை அழகுபடுத்துவதும், அவர்களை நேசிக்கவும் மதிக்கவும் உதவுவது அவர்களின் நல்லொழுக்கமாகும். பதவி, அந்தஸ்து, சொத்து அல்லது வேறு எதுவும் நல்லொழுக்கத்தின் இடத்தைப் பிடிக்க முடியாது.
அனைத்துப் படைப்புகளிலும் உயர்ந்தவரே! படைப்பாளனின் அன்பரே! நபிமார்களின் தலைவரே, நன்மையின் ஊற்றுமூலரே, மக்களில் சிறந்தவரே, மேன்மையின் ஊற்றுமூலரே, எங்கள் கண்ணியமிக்க நபியே! நாங்கள் உங்களைப் பாராட்ட முயற்சிக்கவில்லை, எங்கள் எழுத்துக்களை உங்களுடன் இணைத்து மதிப்புமிக்கதாக ஆக்குகிறோம்.
ஓ ரஸூலல்லாஹ்! நான் உம்மைப் பாராட்ட முடியாது,
நாங்கள் அனைவரும் உமக்காகவே படைக்கப்பட்டோம்.
முஹம்மத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹு தஆலாவின் தூதர். அவர் ஸய்யித், மனிதகுலத்தின் தலைவர். கியாமத் (தீர்ப்பு) நாளில், ஜஹன்னமிடமிருந்து அவரைப் பின்தொடர்பவர்களைக் காப்பாற்றுபவர்களில் அவர் மிகவும் தாராளமானவர்.
கியாமத் நாளில் மண்ணறையிலிருந்து முதலில் எழுந்திருப்பவர். அவர்தான் முதலில் பரிந்து பேசுவார். அவருடைய பரிந்துரை முதலில் ஏற்றுக்கொள்ளப்படும். அவர் முதலில் ஜன்னாவின் கதவைத் தட்டுவார். உடனே அவருக்காகக் கதவு திறக்கும். "லிவா அல்-ஹம்த்" என்ற கொடி அவரது கையில் இருக்கும். ஆதம் அலைஹிஸ்ஸலாம் மற்றும் ஒவ்வொரு முஃமின்களும் (நம்பிக்கையாளர்) அவருடைய காலத்திலிருந்து கியாமத் வரை அந்தக் கொடியின் கீழ் இருப்பார்கள்.
ஒரு ஹதீஸ் அஷ்-ஷரீப்பில், நமது நபி இவ்வாறு கூறினார், "கியாமத் நாளில், நான் முந்தைய மற்றும் பிந்தைய அனைவருக்கும் ஸய்யித். நான் உங்களுக்கு உண்மையைத் தெரிவிக்கிறேன்; நான் பெருமை பேசவில்லை." மற்றொரு ஹதீஸ் அஷ்ஷரீப்பில், "நான் ஹபீப், அல்லாஹு தஆலாவின் அன்பிற்குரியவன். நான் நபிமார்களின் தலைவர். நான் இதை பெருமைக்காக சொல்லவில்லை" என்று கூறினார்.
பல்வேறு இஸ்லாமிய மொழிகளில் எழுதப்பட்ட அனைத்து மவ்லிதுகளிலும் நமது நபியின் பெற்றோர் தூய்மையானவர்கள் என்று எழுதப்பட்டுள்ளது. குர்ஆன் அல்-கரீமுக்குப் பிறகு மிகவும் மதிப்பு மிக்க மற்றும் சரியான நூலான புகாரியில் உள்ள ஒரு ஹதீஸ் அஷ்-ஷரீப்பில், எங்கள் நபி இவ்வாறு கூறியுள்ளார், "எல்லா வயதிலும், காலத்திலும் வாழும் சிறந்த, உயர்ந்த மனிதர்களின் மூலம் நான் உலகிற்குக் கொண்டு வரப்பட்டேன்."
மீண்டும், எப்போதும் உண்மையைக் கூறுபவர் ('அலைஹிஸ் ஸலாது வஸ்ஸலாம்), "நான் நபிமார்களுள் இறுதியானவன் (அலைஹிமுஸ்ஸலாம்) நான் தற்பெருமை பேசவில்லை. நான் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மத் ஆவேன். அல்லாஹு தஆலா மனிதர்களைப் படைத்தான். அவன் என்னை நல்லவர்களில் ஒருவனாகப் படைத்தான். அல்லாஹு தஆலா மக்களை பல பிரிவுகளாகப் பிரித்தான். அவன் என்னை மிகச் சிறந்தவனாக வைத்தான். பின்னர் இந்த சிறந்த பிரிவை அவன் கோத்திரங்களாகப் பிரித்தான். அவன் என்னை அவர்களில் மிகச் சிறந்தவர்களில் வைத்தான். பின்னர் அவன் இந்த கோத்திரத்தை வீடுகளாகப் பிரித்தான். அவன் என்னை சிறந்த வீட்டிலிருந்து, அதாவது குடும்பத்திலிருந்து உலகிற்கு அழைத்து வந்தான். நானே மக்களில் சிறந்தவன். நான் சிறந்த குடும்பத்தைச் சேர்ந்தவன். கியாமத் நாளில், எல்லோரும் அமைதியாக இருக்கும்போது, நான் பேசுவேன். யாரும் அசைய முடியாதபோது, நான் அவர்களின் பரிந்துரையாளன். யாரிடமும் நம்பிக்கை இல்லாத போது, நிச்சயமாக நான் அவர்களுக்கு நற்செய்தி கூறுபவனாக இருக்கின்றேன். அந்த நாளில், ஒவ்வொரு உதவியும், ஒவ்வொரு நலவும், ஒவ்வொரு கதவின் திறவுகோலும் என்னிடம்தான் இருக்கும். லிவா அல்-ஹம்த் என் கைகளில் உள்ளது. நானே மக்களில் சிறந்தவன், மகத்தான கொடை வள்ளல். அன்றைய தினம் என்னிடம் ஆயிரக்கணக்கான சேவகர்கள் இருப்பார்கள். கியாமத் நாளில் நானே இமாமாகவும், சொற்பொழிவாளராகவும், பரிந்துரை செய்பவராகவும் இருப்பேன். இதை நான் தற்பெருமைக்காக சொல்லவில்லை. (நான் உண்மையைக் கூறுகிறேன். உண்மையைத் தெரிவிப்பது என் கடமை. இவற்றைச் சொல்லாவிட்டால் நான் என் கடமையைச் செய்திருக்க மாட்டேன்.)”
அவர் இல்லையென்றால் (அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம்) அல்லாஹு தஆலா எதையும் படைத்திருக்க மாட்டான். அவன் இறைவன் என்று வெளிப்படுத்தப்பட்டிருக்காது. ஆதம் அலைஹிஸ்ஸலாம் தண்ணீருக்கும் பூமிக்கும் இடையில் இருந்தபோது, அதாவது அவரது மண் பிசைந்து கொண்டிருந்த போது, அவர் (முஹம்மத் அலைஹிஸ்ஸலாம்) ஒரு நபியாக இருந்தார், முஹம்மத் அலைஹிஸ்ஸலாம் அல்லாஹ்வின் அன்புக்குரியவர் என்பதால், அவரைப் பின்பற்றுபவர்கள் பிரியமானவர்களின் நிலைக்கு உயர்வார்கள். ஏனெனில், முஹிப், அதாவது நேசர், தன் நேசரின் ஒழுக்கங்களையும் அடையாளங்களையும் கொண்டவரையும் நேசிக்கிறான்.
ஸய்யித் மற்றும் மனிதகுலம் அனைத்திலும் உயர்ந்த நபியாகிய அத்தகைய நபியின் வழியை நம்பி பின்பற்றுபவர்கள் நிச்சயமாக உம்மத்தில் சிறந்தவர்களாக இருப்பார்கள். ஸூரா ஆல இம்ரானின் 110 ஆவது வசனம் அவர்களுக்கு நன்மாராயமாகும். அது மஆலில் பின்வருமாறு: "நீங்கள் உம்மத்களில் சிறந்தவர்கள், மார்க்கவாதிகளில் சிறந்தவர்கள்." அவரை நம்பாதவர்கள், அவரைப் புரிந்து கொள்ள முடியாதவர்கள், அவரும் தங்களைப் போன்றவர் என்று கருதுபவர்கள் மக்களில் மோசமானவர்கள். ஸூரா அத்-தௌபாவின் 98 ஆவது ஆயத், மஆலில் பின்வருமாறு, "மூர்க்கமான, கடின இதயம் கொண்ட அறிவிலிகள் உங்களை நம்ப மாட்டார்கள். அவர்கள் பெரும்பாலும் முனாஃபிக்குகள் (நயவஞ்சகர்கள்) ஆவர்." உலகின் இன்றைய நிலையில், அவனது ஸுன்னாவை, அதாவது இஸ்லாத்தைப் பின்பற்றுவதில் பெருமைப்படுபவர்கள் எவ்வளவு அதிர்ஷ்டசாலிகள்.
ஜனாப் அல்-ஹக் ஸூரா அந்-நிஸாவின் 80 ஆவது ஆயத்தில், முஹம்மத் அலைஹிஸ்ஸலாமுக்குக் கீழ்ப்படிவது அவனுக்குக் கீழ்ப்படிவதாகும் என்று கூறுகிறான். மஆலில், "எவர் ரஸூலுக்குக் கீழ்ப்படிகிறாரோ அவர் அல்லாஹு தஆலாவுக்குக் கீழ்ப்படிகிறார்." ஸூரா அல் ஹஷ்ரின் ஏழாவது ஆயத்தில், "என் ரஸூல் கொண்டு வந்ததை எடுத்துக் கொள்ளுங்கள், அவர் விலக்கியதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்" என்று மஆலில் கூறப்பட்டுள்ளது. இஸ்லாத்துக்குக் கட்டுப்பட்டு நடப்பது அவசியம் என்பதை இந்த ஆயத்துல் கரீமா காட்டுகிறது. ஸூரா அல்-கலமின் 4 ஆவது ஆயத்தில், அல்லாஹு தஆலா மஆலில் இவ்வாறு கூறியுள்ளான், "நிச்சயமாக உங்களுக்கு குலுக் அல்-அழீம் (உங்களிடம் மிக மகத்தான ஒழுக்கங்கள் உள்ளன)", "ரஸூலுல்லாஹ்வில் உங்களுக்கு நல்ல முன்மாதிரிகள் உள்ளன."
ஒரு கருணையாக, ஜனாப் அல்-ஹக் எங்களை அவரது உம்மாவாக ஆக்கி மிகப் பெரிய அருட்கொடையை வழங்கியுள்ளான். அவரைப் பின்பற்றுவதும் கீழ்ப்படிவதும் அவசியம் என்பதை அவன் தெளிவுபடுத்தியுள்ளான். இந்த மகத்தான பாக்கியத்திற்காக நமது எல்லாம் வல்ல ரப்பை (இறைவனை) நாம் புகழ்ந்து நன்றி செலுத்த முடியாது.
மனித குலம் முழுமைக்குமான உண்மையான வழிகாட்டியான நமது அன்புக்குரிய நபி முஹம்மத் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வாழ்க்கையை இந்த நூல் சொல்கிறது. அவரது நல்லொழுக்கங்கள், அற்புதங்கள், பண்பாடுகள், மற்றும் அவரைப் பின்பற்றுவது ஆகிரத்திலும் உலகிலும் ஆனந்தத்திற்கு மிக முக்கியமான கடமை என்று கூறுகிறது.
நாம் நமக்கும், நம் குடும்பங்களுக்கும், நம் தாயகத்திற்கும், நம் நாட்டிற்கும் பயனுள்ள மக்களாக இருக்க விரும்பினால், நாம் முஹம்மத் அலைஹிஸ்ஸலாமைப் பின்பற்ற வேண்டும். நாம் அவரைப் பின்பற்ற வேண்டும், அப்போதுதான் நாம் இம்மையிலும் மறுமையிலும் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க முடியும்.
ஹக் தஆலா எங்கள் அன்புக்குரிய நபி முஹம்மத் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் அன்பால் எங்கள் இதயங்களை நிரப்பி, அஹ்லுஸ் ஸுன்னாவின் அறிஞர்கள் வெளிப்படுத்தியபடி சரியான பாதையில் நம்மை வழிநடத்துவானாக! ஆமீன்!
பேராசிரியர். கலாநிதி. ரமழான் அய்வல்லி
